அடுத்து டெல்டா.. தஞ்சாவூரில் நிர்வாகிகளை சந்திக்கும் விஜய்.. மார்ச் 2வது வாரத்தில் நடக்கும் சம்பவம்!

சென்னை: மார்ச் 2வது வாரத்தில் தவெக தலைவர் விஜய் தஞ்சாவூரில் அக்கட்சி நிர்வாகிகளை சந்திக்க உள்ளதாக தெரிய வந்துள்ளது. இதற்காக காவல்துறையிடம் தவெக தரப்பில் நிர்வாகிகள் மனு கொடுக்க இருக்கின்றனர். இதற்கிடையில் பொள்ளாச்சியிலும் நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்திற்கு விஜய் தயாராகி வருகிறார்.

சட்டசபைத் தேர்தல் நெருங்கிவிட்ட சூழலில், அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. ஏற்கனவே திமுக ஒவ்வொரு வாரமும் ஒரு மாநாட்டை நடத்தி வருகிறது. ஒரு பக்கம் ஸ்டாலின், மறுபக்கம் உதயநிதி ஸ்டாலின் பல்வேறு கூட்டங்களை நடத்தி வருகின்றனர். அதேபோல் கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதிப் பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையும் நடந்து வருகிறது.

அதேபோல் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் தொடர்ந்து பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். அந்த வகையில் தவெக தலைவர் விஜய் ஒவ்வொரு 10 நாட்களுக்கு ஒரு நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தை நடத்த திட்டமிட்டிருக்கிறார். பிப்ரவரி மாதத்தில் மட்டும் தவெக 3வது ஆண்டு தொடக்க விழா, சேலம் நிர்வாகிகள் சந்திப்பு மற்றும் வேலூர் நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தில் விஜய் பங்கேற்றுள்ளார். இதையடுத்து விஜய்யின் நகர்வு என்னவாக இருக்கும் என்ற கேள்விகள் எழுந்தது. இந்த நிலையில் அடுத்ததாக விஜய் தஞ்சாவூர் மற்றும் பொள்ளாச்சியில் நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தை நடத்த தயாராகி வருகிறார். மார்ச் 2வது வாரத்தில் தஞ்சாவூரில் தவெக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்திற்கான ஏற்பாடுகள் தொடங்கப்பட்டுள்ளது. இதனிடையே தவெக நிர்வாகிகள் காவல்துறையிடம் அனுமதி கேட்டு மனு கொடுக்க உள்ளது தெரிய வந்துள்ளது. அதேபோல் தவெகவின் முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலையும் விஜய் தயார் செய்து வருகிறார். இதனால் விரைவில் முதற்கட்ட வேட்பாளர்களையும் அறிமுகம் செய்ய விஜய் திட்டமிட்டிருக்கிறார். நகர்ப்புறங்களில் விஜய்க்கு அதிக ஆதரவு இருந்து வருகிறது.

27 Feb 2026